சாலையை விரிவுப்படுத்த தேவாலயம் இடிப்பு: அண்ணா நகரில் பரபரப்பு
சாலையை விரிவுபடுத்தும் பணிக்காக நிலங்களை கையகப்படுத்துவதற்காக அண்ணா நகர் பகுதியில் உள்ள தேவாலயம் இடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு, வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா நகர் திருமங்கலம் சாலையில் தங்கம் காலனியில் தென்னிந்திய திருச்சபைக்கு சொந்தமான சி.எஸ்.ஐ இம்மானுவேல் தேவாலயம் உள்ளது. மிக பழமையான இந்த ஆலயத்தில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
அண்ணா நகர் திருமங்கலம் சாலையை 30 அடியில் இருந்து 60 அடியாக விரிவு படுத்த உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் நிலம் கையகப்படுத்தும் பணியில் வீட்டு வசதி வாரியம் நடவடிக்கையில் ஈடுபட்டது.
நேற்று காலை திடீரென வந்த மாநகராட்சி அதிகாரிகள் 4 பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு சாலை ஓரம் இருந்த 12 குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேவாலயத்தின் ஒரு பகுதியை இடித்து தள்ளினர்.
ஆலயத்தின் ஒரு பகுதியில் உள்ள சுவர் மற்றும் அறையினை இடித்து தள்ளினர். இதனை அறிந்த ஆலய உறுப்பினர்கள் ஒன்று திரண்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு எதிராக கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை தடுக்க முயன்ற போது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், 5க்கும் மேற்பட்டவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.
ஆலய அறைக்குள் இருந்த பதிவேடுகள், பைபிள் மற்றும் ஆலயத்தின் சுவர் மீது வைக்கப்பட்டு இருந்த வசன போர்டுகள் என அனைத்தையும் அதிகாரிகள் அள்ளி சென்றுவிட்டனர்.
போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆலயம் இடிக்கப்பட்டதற்கு ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.