ஒக்கி புயல், மழையால் பாதித்த பகுதிகளை சீர்செய்ய ரூ.9,302 கோடி ஒதுக்க வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை

கன்னியாகுமரி: தமிழகத்தில் பருவமழை மற்றும் புயல் பாதிப்புகளை சரிசெய்ய மொத்தம் 9,302 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார்.

கன்னியாகுமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். மீனவர்கள், விவிசாய பிரதிநிதிகள் உள்ளிட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதற்கிடையே, பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி புயல் நிவாரணம் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமி கூறியதாவது: ஒக்கி புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. அதனை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பிரத்யேக கடற்படை நிலையம் அமைக்கவும், அதற்கு தேவையான ஹெலிகாப்டர்கள், இறங்கு தள வசதிகள் மற்றும் தொலைதூர தொடர்பு வசதி ஆகியவற்றுடன் விரைவில் நிறுவ கேட்டுக் கொண்டோம்.

மேலும், தமிழகத்தில் பருவமழை மற்றும் புயல் பாதிப்புகளை சரிசெய்ய மொத்தம் 9,302 கோடி ரூபாய் ஒதுக்கும்படி பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். புயலினால் ஏற்பட்ட சேதங்களுக்கான மீட்பு நிவாரணம் மற்றும் நிரந்தர சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள 5,255 கோடி ரூபாய் ஒதுக்கவும், நிவாரண பணிக்கு ரூ.747 கோடி ஒதுக்கவும் கேட்டுக் கொண்டுள்கேளாம்.

நாங்கள் அளித்த அறிக்கையை பரிசீலித்து மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறி உள்ளார். நிவாரணம் வழங்குவதில் எந்த பாரபட்சமும் காட்டப்படவில்லை. காணாமல் போன கடைசி மீனவரை மீட்கும்வரை மீட்பு பணி தொடரும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

More News >>