கருணாநிதியை நேரில் பார்த்து நலம் விசாரிக்க சென்னை வருகிறார் ஜனாதிபதி
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கையின் மூலம் தெரிவித்து வருகிறது.
இருப்பினும், மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் இருந்தபடி சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆறாவது நாளான நேற்று கருணாநிதியை நாற்காலியில் அமர வைத்து மருத்துவர்கள் பயிற்சி அளித்தனர்.
இதற்கிடையே, கட்சி பிரமுகர்கள் முதல், சினிமா பிரபலங்கள் வரை கருணாநிதியை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலினிடம் நலம் விசாரித்து செல்கின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி கருணாநிதியின் உடல்நிலை குறித்து போனில் விசாரித்தார். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தெரிந்துக் கொள்வதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் (வரும் 5ம் தேதி) சென்னை வர இருப்பதாக கூறப்பட்டுள்ளது.