தனியார் கல்லூரிகள் பங்கு... தனி விசாரணை தேவை - ராமதாஸ்
அண்ணா பல்கலைக் கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ததில் முறைகேடு நடந்த விவகாரத்தில், தனியார் கல்லூரிகள் பங்கு குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் மறுமதிப்பீட்டில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இதுதொடர்பாக அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மற்றும் பேராசிரியர்கள் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது நீண்டகாலமாகவே நடைபெற்று வரும் முறைகேடு என்பதால் அதிர்ச்சியோ, வியப்போ ஏற்படவில்லை.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெற்ற தேர்வுகளில் தோல்வியடைந்த 3.02 லட்சம் மாணவ, மாணவியர் மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 73,733 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் நடந்த முறைகேடுகள் குறித்து மீனா என்ற மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தான் கையூட்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி உண்மைகளை கண்டறிந்துள்ளனர்.
மறுமதிப்பீட்டு ஊழலை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகமும், கையூட்டு தடுப்புப் பிரிவும் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்காணித்துக் கண்டுபிடித்திருக்க வேண்டும். ஆனால், மீனா என்ற மாணவி இது தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் திரட்டி காவல்துறையிடம் கொடுத்த பிறகு தான் வழக்குப் பதிவு செய்யப் பட்டுளது. ஒரு மாணவியால் இந்த ஊழல் குறித்த ஆதாரங்களைத் திரட்ட முடிந்திருக்கிறது என்றால் இந்த ஊழல் எவ்வளவு காலமாக, எந்த அளவுக்கு வெளிப்படையாக நடந்திருக்கும் என்பதை உணரலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த பருவத்தேர்வுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டதாகவே வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பருவத்தில் மட்டும் தான் முறைகேடு நடந்தது; அதற்கு முந்தைய பருவத் தேர்வுகளில் எந்த முறைகேடுகளும் நடக்கவில்லை என்று நம்பினால் அது நம்மை நாமே முட்டாள்களாக்கிக் கொள்ளும் செயலாகவே அமையும்.
கடந்த 2012&ஆம் ஆண்டு 2018 முதல் பருவத் தேர்வுகள் வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 26 லட்சத்துக்கும் கூடுதலான மாணவர்கள் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில் 20 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மறுமதிப்பீட்டுக்கான கட்டணமாக மட்டும் அண்ணா பல்கலைக்கழகம் சுமார் 200 கோடி ரூபாயை சட்டப்பூர்வமாகவே வசூலித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இப்போது 509 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. கடந்த காலங்களில் இன்னும் கூடுதலான கல்லூரிகள் இயங்கி வந்தன. ஒவ்வொரு பருவத்திலும் நடத்தப்படும் தேர்வுகளில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்லூரிகளின் சராசரி தேர்ச்சி விகிதம் 50 விழுக்காட்டுக்கும் குறைவு தான். ஆனால், மறுமதிப்பீட்டில் மட்டும் சராசரியாக 77% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வுத்தாள்களின் முதல் மதிப்பீடு முறையாக செய்யப்பட்டிருந்தால் மறு மதிப்பீட்டில் அதிகபட்சமாக 5% அளவுக்கு மட்டுமே தேர்வு முடிவுகளில் மாற்றம் இருக்கக்கூடும். ஆனால், 77 விழுக்காட்டினரின் தேர்வு முடிவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது என்றால் அது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு ஐயம் ஏற்பட்டிருக்க வேண்டும்; அதுகுறித்து விசாரணைக்கு ஆணையிட்டிருக்க வேண்டும்.
ஆனால், 7 ஆண்டுகளாக மறுமதிப்பீட்டில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றாலும் கூட, அதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஐயம் ஏற்படவில்லை; விசாரணைக்கும் ஆணையிடவில்லை. அப்படியானால் ஒட்டுமொத்த பல்கலைக்கழக நிர்வாகமும் இந்த ஊழலுக்கு உடந்தை என்று தான் கருத வேண்டியுள்ளது.
மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்காக ஒவ்வொரு விடைத்தாளுக்கும் ரூ.10,000 வீதம் கையூட்டு வசூலிக்கப்பட்டிருக்கிறது. 7 ஆண்டுகளில் மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வாங்கி தேர்ச்சி பெற்ற 20 லட்சம் மாணவர்களில் பாதிப் பேர் ஒரே ஒரு தாளுக்கு ரூ.10,000 கையூட்டு கொடுத்ததாக வைத்துக் கொண்டால் கூட கடந்த 7 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ரூ.1000 கோடிக்கும் கூடுதலாக ஊழல் நடந்திருக்க வேண்டும்.
இந்த ஊழல் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி நிலையில் மட்டும் நடந்திருக்க முடியாது. துணைவேந்தருக்கும் இதில் தொடர்பு இருக்க வேண்டும். உயர்கல்வித்துறை செயலாளர், அமைச்சர் ஆகியோருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.அதுமட்டுமின்றி, மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்குவது ரகசியமாகவோ, வேறு யாருக்கும் தெரியாமலோ நடக்கவில்லை.
வெளிப்படையாகவே நடந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக தனியார் கல்லூரி மாணவர்களிடம் மொத்தமாக கையூட்டு பெறப்பட்டு பல்கலைக்கழக அதிகாரிகளுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதிக தேர்ச்சி பெறும் பொறியியல் கல்லூரிகளில் தான் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேருவார்கள் என்பதால் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் தங்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்டுவதற்காக மாணவர்களிடம் கையூட்டு வசூலித்துக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
எனவே, மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது தொடர்பான ஊழலை பேராசிரியர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரி சம்பந்தப்பட்ட ஊழலாக மட்டும் பார்க்கக் கூடாது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், உயர்கல்வித்துறை செயலாளர்கள், அமைச்சர்கள், தனியார் கல்லூரிகள் ஆகியவற்றுக்கு உள்ள தொடர்புகள் குறித்து தனி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்திலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும், குறிப்பாக அஞ்சல்வழியில் கல்வி பயிலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது. இது குறித்தும் விரிவான விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.