பெட்ரோல் மீட்டர் அளவீடுகளில் மோசடி...?
பெட்ரோல் நிலையங்களில் மீட்டர்களில் அளவீடுகளில் முறைகேடு செய்து, ஏராளமான பண மோசடியில் ஈடுபட்டது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனையில் தெரிய வந்துள்ளது.
சென்னை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படும் பெட்ரோல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் கோயம்பேடு, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி உள்ளிட்ட பெட்ரோல் நிலையங்களில் நடந்த சோதனையானது இன்று மாலை முடிவடைந்தது.
மேற்கண்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் பெட்ரோல் நிலையங்களில் வாடிக்கையாளருக்கு பெட்ரோல் வழங்கும் போது அதன் மீட்டர்களில் அளவைக் குறைத்து, அதன் மூலம் கிடைக்கும் பெட்ரோல்களை வெளியே விற்று ஏராளமான பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 11 லட்சம் ரூபாய் அளவிற்கு மேற்கண்ட பெட்ரோல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருசக்கர வாகனங்கள் , கார்கள் ஆகியவை பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் போடும்போது அந்த அளவீடுகள் உண்மையிலேயே சரிதானா என்ற சந்தேகம் பெரும்பாலோனருக்கு எழுவது உண்டு.
இந்த நிலையில் கூட்டுறவு சங்கங்களின் மூலம் வழங்கப்படும் பெட்ரோல் நிலையங்களில் இதுபோன்ற மீட்டர் அளவீடுகளில் ஏமாற்றி மோசடி செய்த சம்பவம், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார் ஓட்டுனர் இடையே ஒரு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.