இரு தினங்களுக்கு மிதமான மழை!
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மேற்கு பருவமழை தொடங்கி முதல் இரண்டு மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் இயல்பை ஒட்டி மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் 1 முதல் இன்றைய தினம் வரையிலான காலகட்டத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் பதிவான மழையளவு 112 மில்லி மீட்டர் இந்த காலகட்டத்தில் இயல்பு அளவு 120 மில்லி மீட்டர் ஆகும்.
மலைப் பகுதிகள் அடங்கிய மாவட்டங்களான கோவை தேனி நெல்லை ஆகிய மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் இயல்புக்கு அதிகமாக 50 சதவீத மழை பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 6 சென்டிமீட்டர், திருப்புவனம், காட்டுமன்னார்கோயில், ஆனைக்காரன் சத்திரம், செங்கல்பட்டு 5 சென்டிமீட்டர், குறைந்த பட்சமாக மகாபலிபுரம் திருமயம் 4 சென்டிமீட்டர், ஸ்ரீமுஷ்ணம் விருதாச்சலம் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், வளிமண்டலத்தின் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாகவும் வெப்ப சலனம் காரணமாகவும் அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை மாலை மற்றும் இரவு வேலைகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.