கருணாநிதியை மீண்டும் சந்தித்து உடல் நலம் விசாரித்தார் கமல்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தெரிந்துக் கொள்வதற்காக கமல்ஹாசன் மீண்டும் நேரில் வந்து சந்தித்தார்.

திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலை குறைவால் கடந்த 27ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோதே கருணாநிதியின் உடல் நிலை சற்று பின்னடைவை சந்தித்தது. மருத்துவர்கள் அளித்த உடனடி சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலை சீரானது. கருணாநிதியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, நேற்று நாற்காலியில் அமர வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

கருணாநிதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பரவியது முதல் அரசியல் பிரமுகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் அனைவரும் சந்தித்து வருகின்றனர்.அந்த வகையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருணாநிதி உடல்நிலை குன்றி வீட்டில் இருந்தபோதே நேரில் வந்து சந்தித்து நலம் விசாரித்தார்.இந்நிலையில், இன்று மீண்டும் மருத்துவமனைக்கு நேரில் வந்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் நலம் விசாரித்தார்.

இதற்கிடையே, நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் இன்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த மருத்துவமனைக்கு வந்திருந்தார். இவருடன், ஆதரவற்றோர் குழந்தைகள் சிலரும் வந்து கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

More News >>