மூடப்பட்டது ஈஃபிள் டவர்: பணியாளர்கள் வேலை நிறுத்தம்
By SAM ASIR
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது ஈஃபிள் டவர். நிர்வாக உத்தரவினால் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக, பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். ஆகவே, உள்ளூர் நேரப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு ஈஃபிள் டவர் பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின் வெள்ளியன்று மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தேசத்தின் தலைநகர் பாரிஸூக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். கடந்த ஆண்டில் மட்டும் 4 கோடி பேர் வந்துள்ளனர். முக்கியமான சுற்றுலாதலமான 1,063 அடி (342 மீ) உயரம் கொண்ட ஈஃபிள் டவரின் மேல் ஏறி 60 லட்சம் பேர் பார்த்துள்ளனர். காலை 9 மணி முதல் நள்ளிரவு வரை ஈஃபிள் டவரை பார்வையிட அனுமதி உண்டு. கோடைகாலமான தற்போது அதிகம் சுற்றுலா பயணியர் வந்தவண்ணம் உள்ளனர்.
ஈஃபிள் டவரில் இரண்டு லிஃப்ட்டுகள் உள்ளன. அதை பயணியர் பயன்படுத்தி வந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் ஈஃபிள் டவர் நிர்வாகம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன்படி, முன்பதிவு செய்தவர்களுக்கென்று ஒரு லிஃப்ட் ஒதுக்கப்பட்டுள்ளது. நேரடியாக வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இன்னொரு லிஃப்ட்டை பயன்படுத்த பயணியர் வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கு 38 டிகிரி செல்சியஸ் (100 பாரன்ஹீட்) வெப்பம் உள்ளது. அதனால் காத்திருப்போர் அவஸ்தை அடைந்தனர். மிக நீண்ட வரிசையில் பார்வையாளர்கள் காத்திருக்க நேர்ந்ததால், பணியாளர்கள் நிலையை சமாளிக்க சிரமப்பட்டனர்.
ஆகவே, ஈஃபிள் டவர் பணியாளர்கள் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை அறிவித்தது. அதன்படி கடந்த புதன்கிழமை மாலை ஈஃபிள் டவர் மூடப்பட்டது. வியாழன் அன்றும் மூடியிருந்ததால், சுற்றுலா பயணியர் ஏமாற்றம் அடைந்தனர். நிர்வாகத்துடனான பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ஈஃபிள் டவர் வெள்ளிக்கிழமை மீண்டும் பார்வையாளர்களுக்குத் திறக்கப்படும் என்று தெரிய வருகிறது.