தனியொருவன்! - இங்கிலாந்தை எதிர்கொள்ளும் கோஹ்லி

தொடக்க ஆட்டக்காரர்கள், நடுவரிசை என அனைவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு பலியாகி வரும் நிலையில், இரண்டாவது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி, தனியொருவனாக போராடி வருகிறார். மூன்றாவது நாள் ஆட்டத்தை  9/1 என்ற கணக்கிலிருந்து ஆரம்பித்தது இங்கிலாந்து. அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 180 ரன்களுக்கு தங்கள் இரண்டாவது இன்னிங்ஸை இழந்த இங்கிலாந்து அணியில் சாம் குர்ரன் அதிகபட்சமாக 63 ரன்களை எடுத்தார். டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் அரைசதத்தை அவர் பதிவு செய்தார்.   13 ஓவர்களில் 51 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. 8 வது முறையாக அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 53 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்களை சேர்த்தது இங்கிலாந்து.   தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, அவசரகதியில் விக்கெட்டுகளை இழக்க ஆரம்பித்தது. முரளி விஜய், ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ரஹானே என நம்பிக்கை வரிசை சரிந்த நிலையில், பின்னர் வந்த அஸ்வினும் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய கேப்டன் கோஹ்லியும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் களத்தில் உள்ளனர்.   கோஹ்லி 43 ரன்களை எடுத்துள்ளார். முதலாவது இன்னிங்ஸில் சதம் கடந்து அணியை தூக்கி நிறுத்திய அவர், இரண்டாம் இன்னிங்ஸிலும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடி வருகிறார். 110 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்தியா, வெற்றி பெறுவதற்கு இன்னும் 84 ரன்களை எடுக்க வேண்டும்.   இன்னும் இரண்டு நாள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில், தனது ஆயிரமாவது டெஸ்ட்டை விளையாடி வரும் இங்கிலாந்திடமிருந்து வெற்றி கனியை தட்டிப்பறிக்குமா இந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More News >>