ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்க - சீமான்
மகப்பேறு குறித்த பயிற்சிக்காக கைதுசெய்யப்பட்ட ஹீலர் பாஸ்கரை விடுதலை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
ஹீலர் பாஸ்கர் கைதைக் கண்டித்து சீமான் விடுத்துள்ள அறிக்கையில், "மரபுவழி மருத்துவத்தை வலியுறுத்தி வரும் ஹீலர் பாஸ்கர் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியினை அளிக்கிறது. மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரையைச் செய்யவிருந்தார் என்கிற ஒற்றைக் காரணத்தாலேயே அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் என்பது இந்திய அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான கருத்துரிமைக்கு முற்றிலும் எதிரானதாகும்.
நிஷ்டை எனும் அமைப்பின் மூலமாக, ‘வீட்டிலேயே சுகப்பிரசவம் நிகழ்வதற்கு எளிய வழிகாட்டும் நிகழ்ச்சி’ எனும் பெயரில் மகப்பேறு குறித்தப் பரப்புரை நிகழ்வொன்றை வரும் ஆகஸ்ட் 26 ம் தேதியன்று கோவையில் நடத்துவதற்கு ஹீலர் பாஸ்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் அந்நிகழ்வுக்கெதிராக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டு அவர் மீது மோசடி செய்யும் நோக்கத்துடன் ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அப்படியே அது குற்றமென்றால் பயிற்சி வகுப்பை தடை செய்திருந்தாலே போதுமானது. மரபுவழி மருத்துவத்தையே மடமைத்தனம் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்துவதைத் தாண்டி வேறு எதனையும் இக்கைது நடவடிக்கை சாதிக்கப் போவதில்லை.
திருப்பூரில் கிருத்திகா எனும் பெண்மணிக்கு அவரது கணவர் காணொளியைப் பார்த்து மகப்பேறு பார்க்க முயன்று அப்பெண்மணி இறந்துபோனது பெரும் வேதனைக்குரிய நிகழ்வாகும். முறையான வழிகாட்டுதலோ, மகப்பேறு பயிற்சியோ, முன் அனுபவமோ, அதுகுறித்தான எந்தவொரு அடிப்படை அறிவுமின்றி மகப்பேறு செய்ய முயன்றது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அதேநேரத்தில், இதனை வைத்து மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் கட்டமைக்க முயல்வதும், அதுகுறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்துவோரை சிறைப்படுத்துவதும் மிகத் தவறானப் போக்காகும். இது தமிழர்களின் மரபுவழி மருத்துவத்திற்கும், பாரம்பரியமான இயற்கை வாழ்வியலுக்கும் திரும்புவோரைத் திட்டமிட்டுக் குழப்பி திசைதிருப்பும் துரோகச்செயலாகும்.
முடி உதிர்தல், ஆண்மைக்குறைவு போன்றவைகளுக்குத் தீர்வெனக் கூறி பலதரப்பட்ட விளம்பரங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிக்கைகளிலும் நாள்தோறும் வந்தவண்ணம் இருக்கின்றன. அவ்விளம்பரங்கள் வாயிலாகக் காட்டப்படும் மருத்துவமானது உயிருக்குத் தீங்கு விளைவிக்கா, பக்கவிளைவும் எதுவுமற்ற தீர்வினைத் தரும் என்பதற்கு எவ்வித உறுதிப்பாடுமில்லை.
அவ்வாறு காட்டப்பட்ட மருத்துவத்தின் வாயிலாக உயிரிழப்புகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் இருக்கவே செய்கின்றன. இவ்வாறு தனிப்பெரும் நிறுவனங்களின் இலாப வேட்டைக்காக மக்களின் அறியாமையை மூலதனமாகப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உயிரும், உடலும் வணிகமாக்கப்பட்டு மருத்துவத்துறையில் நடைபெற்று வரும் இப்பெரும் மோசடி ஆளும் வர்க்கத்தின் கண்பார்வையில்தான் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் எவரையும் மோசடி வழக்கின் கைதுசெய்ததுமில்லை; அவர்களது பரப்புரைக்கு எவ்விதத் தடை உத்தரவை இடவுமில்லை.
மேலும், மதங்களின் பெயராலும், ‘நோயைக் குணப்படுத்துகிறேன்’ எனும் பொய்யுரையும், ‘இறந்தவரை உயிர்ப்பிக்க எம்மிடம் வாருங்கள்’ எனும் மத அடிப்படைவாதப் பரப்புரையும் இங்கு செய்யப்பட்டுக் கொண்டுதானிருக்கிறது. வயிற்றில் இருக்கும் குழந்தையை வெளியே எடுக்க நல்ல நேரம் பார்க்கும் மூட நம்பிக்கை கொடுமைகளும்கூட தழைத்துக் கொண்டுதானிருக்கிறது. அவர்களுக்கெதிராக சட்டமும், அரசும் இதுவரை எவ்விதத் துரும்பையும் கிள்ளிப் போட்டதில்லை.
ஆங்கில மருத்துவமான அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் மூலமாக குழந்தையை வெளியே எடுக்கும்போது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதை கண்முன்னே பார்த்து வருகிறோம். மகப்பேறின்போது தாய் இறந்துபோவதை மோசமானச் சுகாதார குறியீடாக உலகச் சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. அலோபதி மருத்துவத்தில் சிசேரியன் செய்யும்போது நிகழும் மரணங்களை வைத்து எவரும் ஆங்கில மருத்துவமே தவறென வாதிட முன்வருவதில்லை. இன்னும் சொல்லப் போனால், விபத்து எனக் கூறி அதனை எளிதாக மூடி மறைத்து விடுகின்றனர்.
அதேசமயம், இயற்கையாகக் குழந்தையைப் பெற்றெடுக்கும் மரபுவழி மருத்துவத்தையே பயிலாத ஒருவர் சுகப்பிரசவம் எனும் பெயரில் தனது மனைவிக்குப் பிரசவம் பார்க்க முயன்று அதில் அந்தக் கர்ப்பிணி பெண் இறந்து போனதை தனிமனிதத் தவறு என்பதனைக் கணக்கிடாமல் ஒட்டுமொத்த மரபுவழி மருத்துவத்தையே தவறெனக் குற்றஞ்சாட்ட முயல்வது மிகுந்த உள்நோக்கமுடையது.
இதனை அடிப்படையாக வைத்து மரபுவழி மருத்துவத்தையே அடிப்படைவாதமாகவும், அறிவற்றச்செயலாகவும் நிறுவ முற்படுவோரின் செயலானது மகப்பேறினை பெரும் வணிகமாக்கி அதன்மூலம் இலாபமீட்டத் துடிக்கும் தனியார் முதலாளிகளின் இலாபவேட்டைக்குத் துணைபோகிற கொடுஞ்செயலாகும்.மரபுவழி மருத்துவத்தின் வாயிலாகவோ, ஆங்கில மருத்துவத்தின் வாயிலாகவோ எதன் வாயிலாகக் குழந்தையினைப் பெற்றெடுக்க வேண்டுமென்பதை எவரும் கட்டாயப்படுத்தித் திணிக்க முடியாது.
அது உரிமையினையும், விருப்பத்தினையும் சார்ந்தது. அதேநேரத்தில், நமது பாரம்பரிய மரபுவழி மருத்துவம் குறித்தும், இயற்கை முறையில் மகப்பேறு பெறுதல் குறித்தும் போதிய விழிப்புணர்வையும், வழிகாட்டுதலையும் செய்யலாம். அவ்வாறு செய்ய வேண்டியது தமிழக அரசின் தலையாயக் கடமையாகும். அந்த அடிப்படையில் மரபுவழி மருத்துவம் குறித்த பரப்புரை மேற்கொள்ளவிருந்த ஹீலர் பாஸ்கர் கைது நடவடிக்கை என்பது தேவையற்ற ஒன்றாகும்.
ஆகவே, ஹீலர் பாஸ்கர் மற்றும் அவரது மேலாளர் சீனிவாசன் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.