ராஜஸ்தான் தேர்தல் - பாஜகவின் யாத்திரை பிரச்சாரம் தொடக்கம்
ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, பாஜக யாத்திரை பிரச்சாரத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.
ராஜ்சம்மந்த் என்ற இடத்தில் உள்ள சர்புஜா கோவிலில் இந்த யாத்திரையை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இந்த யாத்திரையில் அம்மாநில முதலமைச்சர் வசுந்திரராஜே சிந்தியா, உள்துறை அமைச்சர் குலோப் சந்த் கட்டாரியா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
58 நாட்களுக்கு சுமார் 6 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணம் செய்யும் வகையில் இந்த யாத்திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. 165 தொகுதிகளை தொடும் வகையில் யாத்திரை செல்ல உள்ளது.
பாஜக பிரசாரத்தை தீவிரப்படுத்தியிருப்பதை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் ராஜஸ்தான் செல்ல உள்ளார். இந்த மாத இறுதியில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். முதல் கட்ட பயணத்தின்போது 3 கோவில்களுக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியை எந்தெந்த இந்து ஆலயங்களுக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற பட்டியலை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் தயாரித்து வருகிறார்.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடை பெற உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்த 3 மாநில தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் 3 மாநில சட்டசபை தேர்தல் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
3 மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால் ஆட்சியை மீண்டும் தக்க வைத்து கொள்ள பாஜக தலைவர்கள் வியூகம் வகுத்துள்ளனர்.