பாஜக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்துவோம் - ராகுல் காந்தி
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசின் ஊழல்களை மக்களுக்கு அம்பலப்படுத்துவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதிதாக உருவாக்கப்பட்ட காங்கிரஸ் காரிய கமிட்டியின் இரண்டாவது ஆலோசனை கூட்டம் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இன்று நடைபெற்றது.
மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், குலாம்நபி ஆசாத், தருண் கோகோய், அசோக்கெலாட், உம்மன் சாண்டி, சித்தராமையா, ஷீலா தீட்சித் மற்றும் காரிய கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உடல் நலக்குறைவு காரணமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பங்கேற்கவில்லை.
காரிய கமிட்டி கூட்டத்தில், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு வரைவுப்பட்டியலில் 40 லட்சம் பேர் இடம்பெறாத விவகாரம், அந்த பிரச்சினையை தொடர்ந்து எப்படி முன்னெடுத்து செல்வது என்பது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், நாடாளுமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் பிற எதிர்க்கட்சிகளுடன் கைகோர்த்து செயல்படுவது, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘இன்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்தோம். நமது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க தவறியது, பெருகிவரும் ஊழல் ஆகிய அவலங்களை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக மக்களிடையே பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.