காணொலி காட்சி வசதி... நீதிமன்றம் அவகாசம்

தமிழகம் முழுவதும் 233 நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்த தலைமைப் பதிவாளருக்கு நான்கு மாதம் காலஅவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள விவகாரத்து வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரிக்கக், லண்டனில் பணியாற்றி வரும் ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அதில், நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதியை ஏற்படுத்த வேண்டுமென்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் தமிழக உள்துறை மற்றும் நிதி துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றங்களில் காணொலி காட்சி வசதி ஏற்படுத்துவதற்கு ரூ.22. 83 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, 233 நீதிமன்றங்களுக்கும் காணொலி காட்சி வசதி ஏற்படுத்த 4 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

More News >>