இன்னும் மூன்று நாட்களில் கருணாநிதி டிஸ்சார்ஜ்: துரைமுருகன் தகவல்
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 27ம் தேதி உடல்நலம் குறைவு ஏற்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்றுடன் எட்டாவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, கருணாநிதியை நாற்காலியில் அமரவைத்து பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் என்று திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துரைமுருகன் கூறுகையில், “கலைஞரின் உடல்நிலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் சொல்ல வருவதை அவரால் கேட்க முடிகிறது. ஆபத்தான காலகட்டத்தை கடந்து அவரது உடல்நிலை முன்னேறி வருகிறது. இதனால், அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வீடு திரும்புவார் ” என்றார்.