நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
இந்தியாவில் நிதி மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடுவதை தடுக்கவும், அத்தகைய நபர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவும் வழிவகுக்கும் தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இந்த மசோதா, மக்களவையில் கடந்த ஜூலை மாதம் 19-ஆம் தேதியும், மாநிலங்களவையில் கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதியும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலை பெறுவதற்காக, அவருக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதலை அளித்துள்ளார்.
இந்திய வங்கிகளில் ரூ.100 கோடி அல்லது அதற்கு அதிக மதிப்பிலான தொகையை கடன் வாங்கி விட்டு, அதைத் திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்யும் நபர், வழக்கு விசாரணையைத் தவிர்ப்பதற்காக, வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், நிதி மோசடியாளர்களின் சொத்துகளை முடக்கவும், பறிமுதல் செய்யவும் வங்கிகளுக்கும், பிற நிதி நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான அம்சங்களும் மசோதாவில் இடம்பெற்றுள்ளன. இந்த மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்ட நிதி மோசடியாளர் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக அமையும்.
இந்தியாவில் நிதி மோசடி செய்து விட்டு, வெளிநாடுகளுக்கு தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி உள்ளிட்டோர் தப்பிச் சென்று விட்டனர். இந்த சூழ்நிலையில், தலைமறைவு நிதி மோசடியாளர்கள் சட்ட மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை வழங்கியுள்ளார்.
இந்த மசோதாவில், விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்ஸி போன்ற மோசடியாளர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவும், எதிர்காலத்தில் இத்தகைய மோசடியில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு மோசடியாளர்கள் தப்பிச் செல்வதை தடை செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம், அமலாக்கத் துறைக்கு இந்த மசோதா மூலம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் 3 மசோதாக்களுக்கும் ஒப்புதல்: இதேபோல், 2018-ஆம் ஆண்டு- பாரத ஸ்டேட் வங்கி (ரத்து மற்றும் திருத்தம்) சட்ட மசோதா, 2018-ஆம் ஆண்டு-சிறப்பு நிவாரண சட்ட (திருத்தம்) மசோதா, 2018-ஆம் ஆண்டு - செலாவணி முறிச் சட்ட (திருத்தம்) மசோதா (காசோலை மோசடி சட்டத் திருத்த மசோதா) ஆகியவற்றுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதில் 2018-ஆம் ஆண்டு - பாரத ஸ்டேட் வங்கி (ரத்து மற்றும் திருத்தம்) சட்ட மசோதாவானது, 1959ஆம் ஆண்டைய பாரத ஸ்டேட் வங்கி (கிளை வங்கிகள்) சட்டம், 1956-ஆம் ஆண்டைய ஹைதராபாத் ஸ்டேட் வங்கி சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாகவும், 1955-ஆம் ஆண்டைய பாரத ஸ்டேட் வங்கி சட்டத்தை திருத்தும் வகையிலும் கொண்டு வரப்பட்டது.
செலாவணி முறி சட்ட (திருத்த) மசோதா அல்லது காசோலை மோசடி சட்டத் திருத்த மசோதாவானது, காசோலை மோசடி தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்கவும், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள 20 சதவீத தொகையை இடைக்கால நிவாரணமாக அளிக்கும்படி காசோலை அளிப்போருக்கு உத்தரவிடவும் நீதிமன்றங்களுக்கு அனுமதியளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டது.
சிறப்பு நிவாரண சட்ட (திருத்த) மசோதாவில், தொழில் தொடர்பாக இருதரப்பினரால் செய்து கொள்ளப்படும் ஒப்பந்தத்தை ஒருசாரார் மீறும்பட்சத்தில், அதன்மூலம் ஏற்படும் பாதிப்புகளுக்கு மறுசாரார் இழப்பீடு கோருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.