வீட்டில் சுகப் பிரசவம்.. மருத்துவச்சி ஆராயி சாதனை!
சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்துள்ள நீர்முள்ளிகுட்டையில், மருத்துவ வசதியில்லாத காலத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு, சுகப்பிரசவம் பார்த்த கைராசியான கிராமத்து மருத்துவச்சி அனைவரையும் ஆச்சரியர்த்தில் ஆழ்த்தியுள்ளார்.
யூடியூப் வீடியோ பார்த்ததில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கிருத்திகா என்ற பெண் இறந்தார். அதேசமயம், தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியை சேர்ந்த பொறியியலாளர் கண்ணனின் மனைவி மகாலட்சுமி வீட்டிலேயே அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இந்த இரு சம்பவங்களும் தற்போது, தமிழகத்தில் விவாதப் பொருளாகி உள்ளது. மருத்துவ உதவியின்றி வீட்டில் பிரசவம் பார்ப்பது தண்டனைக்குரிய குற்றம் என தமிழக சுகாதாரத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் மருத்துவ வசதியே இல்லாத காலத்தில், சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த நீர்முள்ளிகுட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவச்சி ஆராயி பாட்டி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
சுமார் 50 ஆண்டுகளாக தொடரும் சேவையில், ஒரு முறைகூட பிரச்னை வந்ததில்லையாம். பிரசவத்தில் சிக்கல் உள்ள நபர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்படி மருத்துவச்சி சொல்விடுவாராம்.
எந்த நேரத்தில் பிரசவ வலியால் துடித்தாலும், வீடு தேடிச்சென்று ஆராயி பாட்டி சிகிச்சை அளித்துள்ளார். நாளடைவில், துணை சுகாதார நிலையம் வந்ததால், மகப்பேறு சிகிச்சை பார்த்த மருத்துவர்கள், செவிலியர்கள், குறிப்பிட்ட தொகையை கொடுத்து, தங்களது உதவியாளராக இவரை வைத்துக் கொண்டனர்.
சுகப்பிரசவத்திற்கு மிகவும் கைராசியான கிராமத்து மருத்துவச்சியாக வலம் வந்த ஆராயி பாட்டி, சமீப காலமாக வீட்டில் பிரசவம் பார்ப்பதை கைவிட்டுள்ளார். 50 ஆண்டுகளாக சுகப்பிரசவம் பார்த்த ஆராயி பாட்டிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி அரிமா சங்கம் கவுரவித்துள்ளது.