தங்கம் கடத்தல்... திருச்சி விமானநிலையத்தில் சிபிஐ ரெய்டு
திருச்சி விமான நிலையத்தில் 2-வது நாளாக நடைபெறும் சிபிஐ சோதனையில் பயணிகளிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, பல உலக நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதனால் தினமும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வரப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 14 கிலோ தங்கம், 25 லட்சம் ரூபாய் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி விமானநிலையத்தில் அடிக்கடி தங்கம் பிடிபட்டு வந்த நிலையில், சிபிஐ டிஎஸ்பி தலைமையிலான 3 ஆய்வாளர்கள், 9 காவலர்கள் அடங்கிய குழு அதிரடி சோதனை மேற்கொண்டது. 2-வது நாளாக சிபிஐ சோதனை இன்றும் தொடர்கிறது.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்திறங்கிய பயணிகளின் பாஸ்போர்ட்டு, குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்க்கும் பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் செய்து கொண்டிருந்தனர். பயணிகளில் 20 பேர் சுங்க சோதனை முடிந்து வெளியே வந்தனர்.
அப்போது அங்கு திடீர் என வந்த சி.பி.ஐ. அதிகாரிகள் 11 பேர் அவர்களை சூழ்ந்து கொண்டு, அப்படியே மீண்டும் விமான நிலையத்தின் உள்ளே அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் அதிரடி விசாரணை நடத்தினர்.
விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள பயணிகளில் பெரும்பாலானோர் வியாபாரிகள் எனவும் அடிக்கடி சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று வரக் கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், பயணிகள் அனைவரிடமும் விசாரணை முடிந்த பிறகு முழு விவரமும் தெரியவரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.