விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க போராடுவேன் - வைகோ
இந்தியாவில் விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவரை சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை தடை செய்து, 1991ம் ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு சட்ட விரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ், விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த உத்தரவை சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்ட தீர்ப்பாயம் உறுதி செய்தது.
இதை எதிர்த்து, மதிமுக பொது செயலாளர் வைகோ, 2013 ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், மற்றும் சுப்ரமணியன் அமர்வில் இன்று விசாரனைக்கு வந்தது. விசாரணைக்கு வைகோ நேரில் ஆஜரானார்.
மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், "விடுதலை புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையால் வைகோ பாதிக்கப்படவில்லை என்பதால் இந்த வழக்கை தாக்கல் செய்ய அவருக்கு அடிப்படை உரிமை இல்லை. சட்ட விரோத தடுப்பு தீர்ப்பாயத்தில் வைகோவின் இணைப்பு மனு நிராகரிக்கப்படுள்ளது."
"டெல்லியில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னையில் வழக்கு தொடர முடியாது... வைகோவுக்கு அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை முன் வைக்க மத்திய அரசுத்தரப்பில் அவகாசம் கோரியதை அடுத்து விசாரணையை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “விடுதலைப்புலிகள் அமைப்புக்கு விதித்த தடையை நீக்கும் வரை சட்டரீதியாக போராடுவேன்” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.