நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வேன்: மோகன்லால் ஆவேசம்
மலையாள நடிகர் திலீப் பாலியல் தொல்லை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்ததும் மீண்டும் அவர் மலையாள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேரவுள்ளார் என்ற தகவல்கள் பரவியதும் மலையாள நடிகைகள் பலர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஒரு சிலர் மலையாள நடிகர் சங்கத்தில் இருந்து வெளியேறினார்கள். நடிகர் மோகன்லால் தலைவர் பதவி ஏற்றதும் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்தார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நடிகை தான் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை உயர் நீதிமன்றத்துக்கு வைத்தார்.
அதே வேளையில் மலையாள நடிகர் சங்கம் சார்பில் ஒரு சில நாட்கள் முன்பு நடிகை விவகாரத்தில், தனி நீதிமன்றம் அமைக்க அரசு முன் வர வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை மனுவை தயாரித்து அதனை முதல்-அமைச்சர் பார்வைக்கு அனுப்பிட வேண்டும் என்ற நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அது தடுக்கப்பட்டுவிட்டது.
நடிகர் சங்கத்தின் இந்த முடிவினை அறிந்த நடிகர் திலீப் நடுவில் புகுந்து அந்த கோரிக்கை மனு முதல்-அமைச்சர் பார்வைக்கு செல்லாதவாறு தடுத்துவிட்டதாக தகவல்கள் பரவின.
இதனை அறிந்த நடிகர் மோகன்லால் நடிகர் சங்க நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். நடிகை விவகாரத்தில் திலீப் தவறு செய்யவில்லை என்றால் ஏன் பயப்பட வேண்டும்? எல்லா விஷயத்திலும் ஏன் தலையை நுழைகிறார் என்றும்? இவரால் நடிகர் சங்கத்திற்கு கெட்ட பெயர். இதே நிலை தொடர்ந்தால் நான் நடிகர் சங்க தலைவர் பொறுப்பில் இருந்து விலகிவிடுவேன் என்றும் ராஜினாமா செய்ய தயங்க மாட்டேன் என்றும் காட்டமாக கூறியிருக்கிறார் மோகன் லால்.