மோட்டார் வாகன சட்ட மசோதா திருத்தம்: தமிழகத்தில் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் ஓடாது

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை அரசு பேருந்து, ஆட்டோக்கள் எதுவும் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்ட மசோதாவில் திருத்தம் செய்வது குறித்து மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால், மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு வந்தால் தொழிலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.

இதுதொடர்பாக, மத்திய தொழிற்சங்கங்கள் நாடு முழுவதும் நாளை வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள எல்பிஎப், பாட்டாளி, விடுதலை சிறுத்தை, மறுமலர்ச்சி, தேமுதிக போன்ற சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்தனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு போக்குவரத்து, ஆட்டோக்கள், கால் டாக்சிகள் உள்ளிட்டவை ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து தொழிற்சங்க பொதுச் செயலாளரும், சாலை போக்குவரத்து சம்மேளன தலைவருமான ஆறுமுக நயினார் கூறியதாவது: மோட்டார் வாகன சட்ட திருத்தம் செய்து எடுத்த மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இதன் ஒரு பகுதியாக நாளை ஒருநாள் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனால், நாளை ஆட்டோ, கால்டாக்சி உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் ஓடாது. இதன் எதிரொலியாக, தமிழகத்தில் நாளை 3 லட்சம் ஆட்டோக்கள் ஓடாது. சென்னையில் மட்டும் ஒன்றரை லட்சம் ஆட்டோக்கள் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.இதைதவிர, அனைத்து தொழிற்சங்கம் சார்பாக அண்ணாசாலை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

More News >>