தங்கம் கடத்தல்... யார் இந்த குருவி, கொக்கு?nbsp

தங்கம் கடத்தல் புகாரின் எதிரொலி, திருச்சி விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் உள்பட 19 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, துபாய், குவைத் உள்ளிட்ட  உலக நாடுகளுக்கு நேரடி விமான சேவை நடைபெற்று வருகிறது.   இதனால் திருச்சிக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைப்போன்றே, திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தப்படும் சம்பவமும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.   கடந்த, 2016-17ம் நிதியாண்டில், 12 கோடி மதிப்புள்ள, தங்கம்,  சிகரெட், போதைப் பொருட்கள், கரன்சி நோட்டுகள் பிடிப்பட்டன. இதில், 6.6 கோடி மதிப்புள்ள, 22 கிலோ கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. இதுதொடர்பாக, 97 வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.   அதுமட்டுமல்லாது, நட்சத்திர ஆமைகள், அரிய வகை பாம்புகள், தேள், பச்சோந்தி போன்ற வன உயிரின கடத்தலும் தொடர்ந்தன. திருச்சி விமான நிலையம் சர்வதேச கடத்தல்காரர்களின் முக்கிய கேந்திரமாக மாறியிருப்பது தெரியவந்தது.   இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினர் கொடுத்த விரிவான அறிக்கையின்படி, மதுரையை தலைமையிடமாக கொண்ட, சிபிஐ கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை கண்காணிப்பாளர் மதுசூதனன் தலைமையில், 3 ஆய்வாளர்கள், 13 காவலர்கள் ஆகியோர், 2 நாட்களாக திருச்சி விமானநிலையத்தில் சோதனை மேற்கொண்டனர்.    சோதனையில் இறுதியில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சுங்கத்துறை உதவி ஆணையர், இரண்டு கண்காணிப்பாளர்கள், ஒரு ஆய்வாளர் என மொத்தம், 4 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருப்பதாகவும், அவர்களது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மலேசியா நாட்டில் ஜிஎஸ்டி வரிவிதிப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட பின்தான், தங்க கடத்தல் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் குருவி என்றும், அவர்களது முதலாளிகள் கொக்கு என்றும் சங்கேத பாஷையில் அழைக்கப்படுகின்றனர்.   கடத்தலின்போது குருவியுடன் கொக்கு இருந்தபோதும், தங்கத்தை கையில் வைத்திருப்பதில்லை என்பதால் குருவிகளே சிக்குகின்றன. கொக்குகள் தப்பி விடுகின்றன. தற்போது சிபிஐ வசம் சிக்கியுள்ள, 5 பேரும் கொக்குகள் என்கின்றனர்.    கடந்த, 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம், திருச்சி மண்டல சுங்கத்துறை அலுவலக பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த, 35 கிலோ தங்கம் மாயமானது. இவை அனைத்தும் கடத்தல்காரர்களிடம் இருந்து பிடிபட்ட மொத்த தங்கம். இதுகுறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More News >>