சீனாவில் கூகுள் - சுந்தர் பிச்சைக்கு அமெரிக்க செனட்டர்கள் கேள்வி

சீனாவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தணிக்கை செய்யப்பட்ட கூகுள் தேடுபொறியை அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல் பரவியது. ஏற்கனவே கடந்த 2010ம் ஆண்டு, சீனாவின் கட்டளைகளை ஏற்பது தன் கொள்கைக்கு மாறானது என்று கூகுள் நிறுவனம் புறக்கணித்து விட்டது.  தற்போதைய தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை  மீண்டும் சீனாவுக்குள் கால் பதிக்க முயன்று வருகிறார். சீனாவின் தணிக்கை விதிகளுக்கு உட்பட்டு செய்தி செயலி ஒன்றையும் கூகுள் வடிவமைத்து வருவதாக தெரிகிறது. கூகுள் தனது ஆர்ட்டிபிஸியல் இன்டெலிஜன்ஸ் என்னும் செயற்கை அறிவாற்றலுக்கான ஆய்வகம் ஒன்றை சீனாவில் தொடங்கியுள்ளது. அங்கு நூற்றுக்கணக்கான சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர். 77 கோடியே 20 லட்சம் மக்கள் இணையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.   இந்நிலையில் அமெரிக்காவின் ஃப்ளோரிடாவைச் சேர்ந்த குடியரசு கட்சி நாடாளுமன்ற செனட் உறுப்பினர் மார்கோ ரூபியோ உள்பட ஆறு செனட் உறுப்பினர்கள், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.    அக்கடிதத்தில், "கடும் தணிக்கை பகுதியான சீனாவுடன் கூகுள் ஒத்துழைப்பதற்கு காரணம் என்ன? 2010ம் ஆண்டிலிருந்தது தற்போது எவ்விதத்தில் மாறியுள்ளது? எவ்வகையிலாயினும் கூகுள் சீன சந்தைக்குள் நுழைய முயல்கிறதா?" என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சீனாவில் கூகுள் பயன்படுத்தப்போகும் தேடுபொறியின் தணிக்கை பட்டியலையும் அக்கடிதத்தில் அவர்கள் கேட்டுள்ளனர். தங்களது சீன திட்டம் குறித்த தகவல்களை கூகுள் நிறுவனம் உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை.
More News >>