ஒக்கி புயல் பாதிப்பு: முதற்கட்டமாக ரூ.325 கோடி நிதி ஒதுக்கி பிரதமர் மோடி அறிவிப்பு

புதுடெல்லி: ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளுக்கு முதற்கட்டமாக ரூ.325 கோடி நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளான கன்னியாகுமரி, கேரளா மற்றும் லட்சத்தீவுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு, பாதிக்கப்பட்ட மீனவர்கள், விவசாய பிரதிநிதிகளை சந்தித்து பேசினர். அப்போது, புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து கேட்டு அறிந்தார் பிரதமர்.

அதன்பின்னர், பருவ மழை, ஒக்கி புயலாலான பாதிப்புகளை சீர்செய்ய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் சார்பில் பிரதமரிடம் கோரிக்கை வைக்கப்பட்டன.

இதற்கிடையே, கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் மீனவ மற்றும் விவசாய பிரதிநிதிகளை மோடி சந்தித்து பேசினார். அப்போது, புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். புயலால் சேதம் அடைந்த பயிர்கள் மற்றும் படகுகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரியை பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இந்த ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு பிரதமர் மோடி முதற்கட்ட நிவாரண நிதியை அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரண நிதி வழங்கி ஆதரவு அளிக்கும். புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளம் மற்றும் லட்சத்தீவுகளுக்கு முதற்கட்டமாக 325 கோடி ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்கப்படும். புயலால் முழுமையாக சேதமடைந்த 1400 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும்” என்று பிரதமர் அறிவித்தார்.

More News >>