ஐந்து முறை முதல்வரான அஞ்சுக செல்வர் !

தமிழ்நாடு முதல் அமைச்சராக இருந்த பேரறிஞர் அண்ணா மறைந்ததை அடுத்து, மு. கருணாநிதி முதல் அமைச்சர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.   ஐந்து முறை அவர் தமிழக முதல்வர் நாற்காலியை அலங்கரித்துள்ளார். அவர் முதல்வராக பதவியேற்ற நாள் விவரம் பின்வருமாறு: முதல் முறை - 10.2.1969 2வது முறை -15.3.1971 3வது முறை - 27.1.1989 4வது முறை - 13.5.1996 5 வது முறை - 13.5.2006   தமிழக முதல்வராக இருந்தபோது அவர் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளார். அவற்றுள் சில:   அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து: "அரசாங்க விழாக்களில் பாடுவதற்கான தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒன்றைத் தமிழக அரசு தேர்ந்தெடுத்துள்ளது. மனோன்மணியம் இலக்கியத்தில் வரும் இப்பாடலை அரசாங்க விழாக்களில் பாடும்படி விரைவில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்" என்று முதல் அமைச்சர் கருணாநிதி 8.3.1970 அன்று விழா ஒன்றில் அறிவித்தார். அண்ணா மேம்பாலம்: சென்னை ஜெமினி சந்திப்பில் உள்ள அண்ணா மேம்பாலத்தை முதல் அமைச்சர் கருணாநிதி 1.7.1973 அன்று திறந்து வைத்தார்.   அண்ணா மேம்பால திறப்பு விழாவின்போது, கருணாநிதி மாற்றிய சென்னையிலுள்ள சில பாலங்களின் பெயர்கள்: மர்மலாங் பாலம் - மறைமலை அடிகளார் பாலம் அடையாறு பாலம் - தமிழ்த் தென்றல் திரு.வி.க பாலம் வாலஜா பாலம் - காயிதே மில்லத் பாலம் வெலிங்டன் பாலம் - பெரியார் பாலம் ஹாமில்டன் பாலம் - அம்பேத்கார் பாலம்   நெல்லை மேம்பாலம்:  நெல்லை மேம்பாலத்திற்கு 1969ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார் முதல் அமைச்சர் கருணாநிதி. 706 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலத்தை அவரே 1973 நவம்பர் 13-ம் தேதி திறந்து வைத்தார்.   சுதந்திர தின கொடியேற்றம்: சுதந்திர தினத்தின்போது மாநில முதல்வரே தேசிய கொடியேற்ற வேண்டும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வெற்றி பெற்றார்.  முதன்முறையாக 1974ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று (15.8.1974) மாநில முதல்வராக கொடியேற்றினார். 'சென்னை' பெயர் மாற்றம்: 'மதராஸ்' 'சென்னை' என்று இரு பெயர்களால் அழைக்கப்படுவதற்குப் பதிலாக 'சென்னை' என்று மட்டுமே அழைக்கப்படும் என்று 17.7.1996 அன்று முதல் அமைச்சர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.   திருவள்ளுவர் சிலையும் கருணாநிதியும் தமிழ்நாடு அரசு சார்பில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்று 1975 டிசம்பர் மாதம் முதல் அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். இத்திட்டத்திற்காக 1990 - 91 பட்ஜெட்டில் பணம் ஒதுக்கினார். 1990 செப்டம்பர் 6-ம் தேதி உளியை கொண்டு தொடங்கி வைத்தார்.   1994-ல் மத்திய அரசு தடை விதித்தது. 1996ல் முதல்வரானதும் மீண்டும் தொடங்கினார். திருவள்ளுவர் சிலை வேலை 19.11.1999 அன்று நிறைவடைந்தது. 1.1.2000 இரவு முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.   38 அடி பீடத்தில் 95 உயர சிலை ஆக மொத்தம் 133 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 1924 ஜூன் 3 முத்துவேலர் -அஞ்சுகம் தம்பதியருக்கு திருவாரூர் அருகே திருக்குவளையில் பிறந்த கருணாநிதி, 94 வயது நிறைவடைந்தவராய் 2018 ஆகஸ்ட் 7 அன்று  சென்னையில் மருத்துவமனையில் உயிர் துறந்தார். (தொகுக்கப்பெற்றது)
More News >>