கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும்- நடிகர் சிவக்குமார் உருக்கம்
By Radha
பெரியார், ராஜாஜிக்கு பிறகு புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கருணாநிதியின் இடம் காலியாகவே இருக்கும் என நடிகர் சிவக்குமார் உருக்கம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவக்குமார் விடுத்த இரங்கல் குறிப்பில், "டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் பெரியார் , ராஜாஜிக்கு பிறகு 95 வயது வரை புகழோடு வாழ்ந்த அகில இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள்.
பெரியார் - எந்த ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் எதிர்காலத்துக்கு திட்டங்கள் தீட்டினாரோ அவற்றை கலைஞர் அவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த உடனே நிறைவேற்றினார்.
அண்ணா அவர்கள் துவங்கிய திராவிட முன்னேற்ற கழகத்தை கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் கட்டிக்காத்தவர் . அரசியலில் சாதித்ததற்கு இணையாக - கலை இலக்கியத்திலும் 60 ஆண்டுகளுக்கு மேல் சாதனை புரிந்தவர் .
1950 களில் தமிழ் சினிமாவில் நல்ல தமிழ் ஒலிக்க காரணமானவர்களில் முதன்மையானவர் .குறளோவியம் , சங்கத்தமிழ், தொல்காப்பியப்பூங்கா - போன்றவை அவரது புலமைக்குச்சான்றானது .
பாசப்பறவைகள் , பாடாத தேனீக்கள் - அவர் வசனம் பேசி நடித்தேன் .
என் ஓவியங்களை பார்க்க 30 ஆண்டுகளுக்கு முன் எங்கள் இல்லம் வந்து 2 மணி நேரம் இருந்தார் .
சூர்யாவின் முதல் படம் நேருக்கு நேர் - கார்த்தி- முதல் படம் பருத்திவீரன் பார்த்து ஆசி கூறியவர் .தமிழகத்தில் அவர் இடம் என்றும் காலியாகவே இருக்கும் . அன்னாரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதலை தெரிவித்து கொள்கிறேன்". எனக் குறிப்பிட்டுள்ளார்.