அண்ணா, எம்ஜிஆருடன் வைத்து மரியாதை செய்வதே மாண்பு: கமல் அறிக்கை
மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா, எம்ஜிஆருடன் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது உடல் தற்போது ராஜாஜி ஹாலில் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், உடல் நல்லடக்கம் செய்வதற்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதில் தமிழக அரசு பிடிவாதம் பிடித்து வருகிறது. இதுதொடர்பாக, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியட்டுள்ளார்.
அதில், “அண்ணா இருந்த போது கழகம் காத்திட வளர்த்த இரு தம்பிகள் கலைஞரும், எம்.ஜி.ஆரும். அவர்கள் மூவரையும் ஒரே இடத்தில் வைத்து மரியாதை செய்வதே மாண்பு. எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் சேர்ந்த கடைக்குட்டிகளுக்கு மாண்பு இல்லாதது சோகமே. எம்.ஜி.ஆர் இருந்து கலைஞர் இறந்திருந்தால் கண்டிப்பாக அண்ணாவின் தம்பியை அவரருகில் கிடத்தியிருப்பார் ” என்றார்.