அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம்
சென்னை, மெரினாவில் உள்ள அறிஞர் அண்ணா நினைவிடம் பின்புறத்தில் 21 குண்டுகள் முழங்க மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் சந்தன பேழையில் வைத்து நல்லடக்கம் செய்யப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணியளவில் மரணமடைந்தார். தலைவா எழுந்தா வா என்ற கோஷத்துடன் காவேரி மருத்துவமனையை சூழ்ந்திருந்த தொண்டர்களுக்கு கருணாநிதியின் மரணம் மிகவும் அதிர்ச்சியளித்தது. மருத்துவமனை முதல் கோபாலபுரம் வீடு வரையில் தொண்டர்கள் சூழ கருணாநிதியின் உடல் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பிறகு, அதிகாலை 4 மணியளவில் வீட்டில் இருந்து ராஜாஜி ஹாலுக்கு கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டனர். நேரம் செல்ல செல்ல ராஜாஜி ஹாலில் கூட்டம் அலைமோதியது. சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியை சூழ்ந்தனர்.
நாடு முழுவதிலிருந்தும், முக்கிய அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் பலர் நேரில் வந்து கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். சுமார் 4 மணியளவில் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.
ராஜாஜி ஹாலில் இருந்து மெரினா கடற்கரை வரையில் வழிநெடுகிலும் மக்கள் வெள்ளத்துடன் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கட்சி கொடியுடன் தொண்டர்களின் கோஷம் ஒரு பக்கம், பெண்களின் அழு குரல் ஒரு பக்கம் என குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பலதரப்பட்ட மக்களும் இறுதி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர்.
அடி மேல் அடி வைத்து வந்த இறுதி ஊர்வலம் இறுதியாக அண்ணா நினைவிடத்திற்கு வந்து சேர்ந்தது. இதன்பிறகு, முப்படை வீரர்கள் கருணாநிதியின் உடலை சுமந்தவாறு அடக்கம் செய்யும் இடத்திற்கு தூக்கி வந்தனர். பின்னர், முப்படை தளபதிகளை தொடர்ந்து ராகுல் காந்தி, புதுவை முதல்வர் நாராயண சாமி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழக அமைச்சர ஜெயக்குமார், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், குலாம் நபி ஆசாத், தேவ கவுடா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து, முப்படை வீரர்கள் மூவர்ண கொடியை மரியாதையுடன் மடித்து மு.க.ஸ்டாலினிடம் வழங்கினர். மு.க.அழகிரி, கருணாநிதியின் மனைவி ராஜாத்தியம்மாள், மகள் செல்வி, துர்கா ஸ்டாலின், எம்.பி.,கனிமொழி, அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர், கருணாநிதியின் உடல் சந்தன பேழைக்குள் வைத்து இறுதி குடும்பத்தினரால் இறுதி சடங்கு செய்தனர். தொடர்ந்து, 21 குண்டுங்கள் முழங்க அரசு மரியாதையுடன் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.