வருமான வரித்துறை நோட்டீஸ்... ராகுல் காந்தியின் கோரிக்கை நிராகரிப்பு

வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தில் ராகுல் காந்தி கோரிக்கை வைத்தபடி, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

ஜவகர்லால் நேரு அவர்களால் சுதந்திர போராட்ட காலத்தில் தொடங்கப்பட்டது, ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை. இந்த பத்திரிகை 2008-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இதன் கோடிக்கணக்கான சொத்துக்களை அபகரிப்பதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியும், அவரது மகன் ராகுல் காந்தியும் ‘யெங் இந்தியா’ என்ற நிறுவனத்தை 2010-ம் ஆண்டு தொடங்கி அதன் மூலம் அந்தப் பத்திரிகையை வாங்கியதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி புகார் கூறினார். அத்துடன், டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடுத்தார்.

இந்நிலையில், 2011-12-ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்தபோது, ராகுல் காந்தி தான் ‘யெங் இந்தியா’ நிறுவனத்தின் இயக்குனர் என்பதை மறைத்து விட்டார். அதை சொல்லி இருந்தால் அவரது வருமானம் ரூ.68 லட்சம் அல்ல. மாறாக ரூ.154 கோடி என வருமான வரித்துறை கருதுகிறது.

‘யெங் இந்தியா’ நிறுவனம் ரூ.249.15 கோடி வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், ராகுல் காந்தியின் 2011-12 ஆண்டு வருமான வரி கணக்கு விவகாரத்தை விசாரிக்க வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நோட்டீசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஒரு வழக்கு தொடுத்தார். அந்த வழக்கு நீதிபதிகள் ரவீந்திர பட், ஏ.கே. சாவ்லா ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

இது தொடர்பான மற்றொரு வழக்கு வருமான வரி தீர்ப்பாயம் முன்பு 9-ஆம் தேதி விசாரணைக்கு வர இருப்பதால், வருமான வரித்துறை நோட்டீஸ் விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வருமான வரித்துறை நிர்ப்பந்திக்கும் நடவடிக்கை எதையும் எடுத்து விடாமல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று ராகுல் காந்தி தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால் அதற்கு வருமான வரித்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இந்த வழக்கில் அடுத்த விசாரணை வரையில் ராகுல் காந்தி மீது நிர்ப்பந்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படாது என அவர் உறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.

More News >>