மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஷ் தேர்வு

பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண சிங் மாநிலங்களவைத் துணைத்தலைவர் தேர்தலில் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த ஜூலை மாதம் 1-ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனால், காலியாக இருந்த அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஹரிவன்ஷ், எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முயன்றது.

இந்நிலையில், துணைத்தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் 125 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார். இதனால் ஹரிவன்ஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

More News >>