சிலைக் கடத்தல் வழக்கு... தமிழக அரசுக்கு அவகாசம்
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் சிபிஐக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒரு வார காலம் அவகாசம் வழங்கியுள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐஜி பொன் மாணிக்க வேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவை அமைத்து, 2017 ம் ஆண்டு ஜூலை மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாக கூறி, சிலைக்கடத்தல் சம்பந்தப்பட்ட வழக்குகளை சிபிஐ க்கு மாற்றி தமிழக அரசு கடந்த 1ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.
இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மகாதேவன், நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜராகி, பதில்மனு தாக்கல் செய்ய ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதையேற்ற நீதிபதிகள், ஒரு வாரம் அவகாசம் வழங்கி, விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
இதேபோல், சிலைக்கடத்தல் தொடர்பாக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கூறுவதால் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, காவல் ஆணையரின் கருத்தை அறிந்து தெரிவிப்பதாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற நீதிபதிகள், அந்த மனு மீதான விசாரணையை ஆகஸ்ட் 16க்கு தள்ளிவைத்தனர்.