பலித்தது எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திரம்!
திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்கும் களோபரச் சூழலில், ஜெயலலிதா நினைவு மண்டப சிக்கலை களைந்தது முதலமைச்சர் பழனிசாமியின் ராஜதந்திர வெற்றி என அதிமுக வட்டாரங்கள் பேசி வருகின்றன.
திமுக தலைவர் கருணாநிதியை அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இது தொடர்பாக, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்டோர் முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளனர்.
அப்போது அவர்களிடம் மெரினாவில் இடம் தருவதில் உள்ள சிக்கல்கள்களில் குறிப்பாக மத்திய அரசின் சுற்றுச்சுழல் துறையின் அனுமதி வேண்டும் என் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக குழுவினர் வெளியேறியதும், உயர் அதிகாரிகளை அவசரமாக அழைத்து முதலமைச்சர் பேசியுள்ளார்.
அதன் பிறகு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என அறிக்கை வெளியிட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட திமுக தரப்பு வழக்கறிஞர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அப்போது ஜெயலலிதா நினைவிடத்திற்கு எதிரான அனைத்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. திமுக-அரசு தரப்பு இடையே நடந்த காரசார விவாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள், மெரினாவில் கருணாநிதியை நல்லடக்கம் செய்ய இடம் ஒதுக்கும்படி தீர்ப்பு வழங்கினர்.
இந்த விவகாரத்தில் எடப்பாடியின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி என்றே அதிமுக வட்டாரத்தில் பேசுகிறார்கள்.
நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை செயல்படுத்துகிறோம் என்று எடப்பாடி ஒரே வரியில் பதில் சொல்லி, மெரினாவில் நல்லடக்கம் செய்ய உத்தரவுகளைப் பிறப்பித்தார். இந்தத் தீர்ப்பு, ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைய வழிவகுத்துவிட்டது. இவை அனைத்தையும் யோசித்து செயல்பட்டார் எடப்பாடி என்று பெருமையாகச் சொல்கிறார்கள் எடப்பாடியின் ஆதரவாளர்கள்.