6 மாவட்டங்கள் மலை பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட 6 மாவட்ட மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் அவ்வப்போது லோசன மழை பெய்து வருகிறது. அதேபோல் காவிரி நீர்பிடிப்பு, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை ஓய்ந்த பாடில்லை.
நடப்பு ஆகஸ்ட் மற்றும் வரும் செப்டம்பர் ஆகிய இரண்டு மாதத்தில் அதன் தாக்கம் இயல்பாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, கன்னியாகுமரி, நெல்லை, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி ஆகிய 6 மாவட்டங்களின் மலை பகுதியில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 35 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை எதிர்பார்க்கலாம் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.