ஸ்டெர்லைட் ஆலை... தமிழகத்தின் கோரிக்கை நிராகரிப்பு
ஸ்டெர்லைட் ஆலை திறப்பு தொடர்பான வேதாந்தா நிறுவனத்தில் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயம் நிராகரித்துவிட்டது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் கலவரத்தில் முடிந்தது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிர் இழந்தனர். இதைத்தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு மே 28-ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்‘ வைத்தனர்.
இந்த அரசாணையை ரத்து செய்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் டெல்லி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டது.
இந்நிலையில், தமிழக அரசின் வாதத்தை நிராகரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் எனக்கூறி, வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
நிலத்தடி நீர், மாசுபாடு ஏற்படுத்தாத நிலையில் விதிகளை மீறவில்லை என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது. நிலத்தடி மாசு என்று கூறி ஆலையை மூட ஆணையிட்டதை ஏற்க முடியாது என்றும் கூறப்பட்டது.
வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தமிழக அரசு வாதிட்டது. அதை ஏற்க மறுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மாசு தொடர்பான அறிவியல் பூர்வமான ஆதாரத்தை வரும் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் ஆலையில் அமிலக்கசிவை கண்காணிக்க அதிகாரி ஒருவரை பரிந்துரைக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டது. வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும்வரை, ஆலையை திறக்கக்கூடாது எனவும், ஆலை இயங்காமல் இருப்பதை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்கவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.