சிலை கடத்தல் முறைகேடு... அரசு உத்தரவாதம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சோமஸ்கந்தர் சிலை செய்ததில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில் அறநிலைய துறை கூடுதல் ஆணையர் திருமகளை கைது செய்யமாட்டோம் என அரசு உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
ஏகாம்பரநாதர் கோவிலில் சோமாஸ்கந்தர் பஞ்சலோக சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக சிலை கடத்தல் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஏற்கனவே இந்த வழக்கில் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் தான் கைது செய்ய கூடும் என்று கூடுதல் ஆணையர் திருமகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்கப்பட்டது. அது வரை கைது செய்ய இடைக்கால தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அரசு தரப்பில் கைது செய்யமாட்டோம் என உத்தரவாதம் அளிக்கப்பட்டதை பதிவு செய்த நீதிபதி கள், மனுவுக்கு 6 வாரத்தில் பதில் அளிக்க சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.
இதனிடையே, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி கோயில் மூலவர் சிலை திருடப்பட்டிருப்பதாகவும், உற்சவர் சிலை மற்றும் கோயிலின் பழங்கால பொருட்கள் சேதப்படுத்தப்கட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த கோரி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த சமய அறநிலையத்துறை தரப்பில், 2012ம் ஆண்டில் ஆகம விதிகளுக்குட்பட்டு ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் சீரமைக்கப்பட்டது. ஆனால் சிலைகள் மாயமானதாக கூறும் புகாரில் எந்த முகாந்திரம் இல்லை... அனைத்து சிலைகளும் கோயிலில் தான் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, பாரம்பரிய கட்டத்தை சிறப்பாக புதுப்பித்தற்காக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு 2017ஆம் ஆணடு யுனஸ்கோ விருது வழங்கியிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீரங்கம் கோயிலில் சிலை திருட்டு புகார் தொடர்பாக விசாரித்து 6 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அப்போது, ஆகம விதிகளுக்குட்பட்டு தான் அதிகாரிகள் கோயிலுக்குள் சென்று விசாரணை நடத்த வேண்டும் என்றும் கடவுகளுக்கும் தனி மனித சுதந்திரம் இருப்பதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.