கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் பொதுமக்கள்
திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குவியும் பொதுமக்கள், கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் உயிரிழந்ததை தொடர்ந்து, கடும் போராட்டத்திற்கு இடையே சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்.
இறுதிசடங்கில் பங்கேற்ற தொண்டர்கள், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவியும், கண்ணீர் வடித்தும் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ச்சியாக இன்று அதிகாலை முதலே மக்கள் வெள்ளம் கருணாநிதி நினைவிடத்தை சூழ்ந்தது. அங்கு மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் இன்று அதிகாலை கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல், அண்ணா சதுக்கத்தில் குவிந்துள்ள தொண்டர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, கருணாநிதிக்கு மலர் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். கட்சி பாகுபாடினின்றி ஏராளமானோர் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கருணாநிதி நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செய்து வருகின்றனர்.
கட்டுக்கடங்காத மக்களின் கூட்டத்தை தொடர்ந்து, கருணாநிதி நினைவிடத்தில், போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.