ஆட்டிறைச்சியான கன்றுக்குட்டி.. இறைச்சி பிரியர்களே உஷார்

சென்னையில், சட்டவிரோதமாக கன்றுக்குட்டிகளை ஆட்டிறைச்சி எனக் கூறி விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

சென்னை பெரியமேடு பகுதியில், வீட்டில் சட்டவிரோதமாக இறைச்சிக் கூடம் நடத்தி வருவதாகவும் அங்கு கன்றுக்குட்டி வெட்டப்படுவதாகவும் வாட்ஸ் அப்பில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவில் பெரியமேட்டை சேர்ந்த முகமது ஜபருல்லா என்பவர் முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக இறைச்சி கூடத்தை நடத்தி வருவது தெரியவந்தது.

மேலும், அங்கு கன்றுகுட்டிகள் இறைச்சிக்காக வெட்டப்படுவதும் உறுதி செய்யப்பட்டது. மேலும் உணவகங்களுக்கு ஆட்டுகறி எனக்கூறி கன்றுகுட்டி கறியை விற்று வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் பெரியமேடு அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட உணவகங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்படிருந்த 300 கிலோ இறைச்சியயை பறிமுதல் செய்து இறைச்சி கூடத்திற்கு சீல் வைத்தனர்.

மக்கள் விரும்பி உண்ணும் பிரியாணியில்தான் இந்த கறி கலப்படம் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

ஒரு கிலோ ஆட்டிறைச்சி 600 ரூபாய், மாட்டிறைச்சி 220 முதல் 250 வரை விற்கப்படுவதால் விலைகுறைவின் காரணமாக பல உணவகங்களும் தெரிந்தே இந்த கலப்படத்தை செய்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவல் இறைச்சி மற்றும் பிரியாணி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News >>