காற்றால் இயங்கும் கார் - எகிப்திய மாணவர்களின் வடிவமைப்பு
By SAM ASIR
மணிக்கு 40 கி.மீ வேகத்தில், காற்றினால் இயங்கக்கூடிய கார் ஒன்றை எகிப்திய பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். அழுத்தப்பட்ட வாயுவை எரிபொருளாகக் கொண்டு இது இயங்குவதால், இயக்குவதற்கு அதிக செலவு இல்லை.
எகிப்து நாட்டில், எரிபொருளுக்கான மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. உலக நிதி நிறுவனத்திடம் வாங்கியுள்ள 12 பில்லியன் டாலர் கடன் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி அங்கு நிலவி வருகிறது. இந்த பொருளாதார சீர்திருத்த காலத்தில், வரப்பிரசாதமாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கெய்ரோ புறநகரிலுள்ள ஹெல்வான் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்கள், தங்கள் படிப்புக்கான திட்ட வேலையாக (ப்ராஜக்ட்) இக்காரை உருவாக்கியுள்ளனர். இக்கார் அழுத்தப்பட்ட ஆக்ஸிஜனை கொண்டு இயங்குகிறது. 30 கி.மீ. தூரம் ஓடியபிறகு எரிபொருள் நிரப்ப வேண்டியதுள்ளது.
இக்காரை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க தேவையான நிதியை திரட்டும் வாய்ப்புகளை குறித்து மாணவர்கள் யோசித்து வருகின்றனர். 100 கிலோ மீட்டருக்கு ஒருமுறை எரிபொருள் நிரப்பக்கூடியவாறும், மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்வது போன்றும் இக்காரை மேம்படுத்துவதற்கு ஆலோசித்து வருகின்றனர்.