கேரளாவில் கனமழை, வெள்ளப்பெருக்கு எதிரொலி: 26 பேர் பலி
கேரளாவில் கனமழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 26 பேர் பலியாகி உள்ளனர்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து கனமழை பெய்துவருகிறது. 15 ஆண்டுகளில் இல்லா அளவிற்கு கனமழை பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகள் பல சூழ்ந்துள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கேரளாவில் உள்ள அணைகள் மற்றும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இடுக்கி அணை 26 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியதை அடுத்து, திறக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணிக்காக பேரிடர் மீட்பு குழு, ராணுவம் மற்றும் கப்பற்படை வீரர்கள் களத்தில் இறங்கி உள்ளனர்.
கேரளாவில் பெய்த கனமழை எதிரொலியாக, இடுக்கி, மலப்புரம், கண்ணூர், வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் எதிரொலியாக, பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.