நாட்டின் 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை விமானநிலையத்திற்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை தீவிரவாதிகள் சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியுள்ளதாக மத்திய உளவுத்துறை கொடுத்துள்ள எச்சரிக்கையின் பேரில் நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல் படுத்துப்பட்டுள்ளது.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு பயணிகளை வழியனுப்ப வரும் பார்வையாளர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பின்னரே, உள்ளே அனுமதிக்கப்படுகின்றன
விமானநிலையத்தை சுற்றி, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் வரும் 22 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க, சென்னை கோட்டை கொத்தளத்தில், சுதந்திர தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கமாண்டோ படை, குதிரைப்படை, பெண் காவலர்கள், தேசிய மாணவர் படை மற்றும் மாணவ - மாணவியர் பங்கேற்றனர். படைகளுக்கே உரிய மிடுக்குடன், கம்பீர நடைபோட்டு காவலர்கள் அணிவகுத்து சென்றனர்.
2-வது ஒத்திகை நிகழ்ச்சி நாளையும், 3-வது ஒத்திகை நிகழ்ச்சி வரும் 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக, காமராஜர் சாலை, ராஜாஜி சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.