டிவிஎஸ் தலைவரை கைது செய்ய மாட்டோம்: சிலை கடத்தல் தடுப்பு பிரிவு

ஸ்ரீரங்கம் சிலை திருட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டிவிஎஸ் தலைவரை 6 மாதங்களுக்கு கைது செய்ய மாட்டோம் என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

ஸ்ரீ ரங்கத்தை சேர்ந்த ரங்க ராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். அதில் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் மூலவர் சிலை திருடப்பட்டுவிட்டதாகவும், மேலும் உற்சவர் சிலை, கோவிலின் பழங்கால பொருட்கள் பல சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது..இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு வழக்கை மாற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டனர். மேலும் 6 மாத காலத்திற்குள் வழக்கை விசாரித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணையை துவங்கவுள்ள நிலையில், திருச்சி ஸ்ரீ ரங்கநாதர் கோவிலின் முன்னாள் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் முன் ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த ஜாமீன் மனு இன்று காலை விசாரணைக்கு வந்தது அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில் விசாரணை நடைபெறும் இந்த 6 மாத காலத்திற்கு வேணு ஸ்ரீனிவாசனை கைது செய்யமாட்டோம் என்று பதிவு செய்தனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார் அதில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐக்கு மாற்றம் செய்யும் அரசாணையை எதிர்த்து மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த வழக்கில் எதிர் மனுதாரராக டி.வி.எஸ். நிறுவன தலைவருமான வேணு ஸ்ரீனிவாசனை சேர்த்துள்ளனர்.

More News >>