பசுமை வழிச்சாலை திட்டம்.. மனித உரிமை மீறல்?

பசுமை வழிச்சாலை திட்ட எதிர்ப்பு போராட்டத்தில், மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க குழு அமைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை - சேலம் இடையேயான பசுமைவழிச் சாலை திட்டத்திற்காக சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 10 ஆயிரம் கோடி செலவில் செயல்படுத்தப்பட இருக்கும் இத்திட்டதிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்.

அதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த முத்துகுமார், மாரிமுத்து மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த மல்லிகா, சவுந்தர் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து கடுமையாக தாக்கி உள்ளனர்.

இவர்களுக்கு 1 லட்சம் முதல் 2 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க கோரி, சென்னையை சேர்ந்த வழக்குரைஞர் ரத்தினம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.

மேலும், அந்த மனுவில், இத்திட்டத்தை செயல்படுத்த சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காவல் துறையினர் நடத்திய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என மனுதாரர் வலியுறுத்தினார்.

இத்திட்டத்தினால் ஏற்படும் எதிர்மறை பாதிப்பு குறித்தும், மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ஜி.ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அடங்கிய அமர்வு, இதுகுறித்து 4 வார காலத்திற்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

More News >>