அமெரிக்காவில் அடைக்கலம்: விமானத்தை திருப்ப நீதிமன்றம் உத்தரவு

அடைக்கலம் கோரிய பெண்ணையும், அவரது இளவயது மகளையும் திருப்பி அனுப்பிய நிர்வாகத்தை கண்டித்த அமெரிக்க மாவட்ட நீதிமன்றம், அவர்கள் சென்ற விமானத்தை திருப்பி கொண்டு வர ஆணை பிறப்பித்துள்ளது. அமெரிக்க உரிமையியல் சுதந்திர சங்கம் (American Civil Liberties Union) தொடுத்த வழக்கில் வாஷிங்டன் மாவட்ட நீதிபதி எம்மட் சல்லிவன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தலைமை வழக்குரைஞர் ஜெஃப் செசன்ஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.   மத்திய அமெரிக்க நாடான எல் சால்வெடாரை சேர்ந்தவர் கார்மென் என்ற பெண்மணி. கணவரின் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கும்பல் ஒன்றின் கொலை மிரட்டல் காரணமாக கார்மென் தனது மகளுடன் வீட்டை விட்டு ஓடி வந்து அமெரிக்காவில் தஞ்சம் புகுந்திருந்தார். இதுகுறித்து அமெரிக்க உரிமையியல் சுதந்திர சங்கம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அதன்படி, வியாழன் அன்று இரவு 11:59 மணி வரை, கார்மெனையும் அவரது மகளையும் நாட்டை விட்டு வெளியேற்ற மாட்டோம் என்று அமெரிக்க அரசு ஒத்துக்கொண்டிருந்தது. ஆனால், வியாழன் காலை புறப்பட்ட விமானத்திலேயே தாயும் மகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிய வந்தபோது நீதிபதி கோபமடைந்தார்.    அமெரிக்காவுக்கான விசா நடைமுறைகளை கடுமையாக்குதல், குடிபெயர்தல் விதிகளில் கெடுபிடி செய்தல், அகதிகளுக்கு அடைக்கலம் தருவதில் சிக்கல் என்று பல்வேறு விதங்களில் அமெரிக்காவுக்கு மற்ற நாட்டினர் குடிபெயர்வதை டிரம்ப் அரசு தடுத்து வருகிறது. இந்நிலையில் அடைக்கலம் கோரிய கார்மெனையும் அவரது மகளையும் முடிந்த அளவு விரைவிலேயே அவர்கள் நாட்டுக்கு அனுப்பி விட அமெரிக்க அதிகாரிகள் தீர்மானித்து செயல்படுத்தியுள்ளனர்.    தெற்கு டெக்சாஸில் உள்ள மையம் ஒன்றில் தங்கியிருந்த கார்மெனும் அவரது மகளும் விமானத்தில் அனுப்பப்பட்டதை அறிந்த நீதிபதி, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே வாதிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதை கண்டித்தார். அந்த விமானத்தை திரும்ப அமெரிக்காவுக்கு கொண்டு வருவதற்கு அல்லது அந்த நாட்டிற்கு சென்றதும் திருப்புவதற்கு உத்தரவிட்டார். அதன்படி, எல் சாவெடாருக்கு விமானம் சென்றதும் கார்மெனும் அவரது மகளும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்படாமல் மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது.    நீதிபதி எம்மட் சல்லிவன், 1994ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளிண்டனால் நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More News >>