கார், ஷேர் ஆட்டோ சேவை.. சென்னை மெட்ரோ புதிய வசதி

பயணிகள் வசதிக்காக கார், ஷேர் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் கடந்த சில வருடங்களாக மெட்ரோ ரயில் சேவை செயல்பட்டுவருகிறது. சென்னை டி.எம்.எஸ் முதல் விமான நிலையம் வரையிலும், மற்றொரு பாதை, விமான நிலையத்திலிருந்து கோயம்பேடு வரையிலும் செயல்பட்டுவருகிறது.

பயணிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியை இரு சக்கர வாகன வசதியை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. அதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்தது. இதனை தொடர்ந்து, மேலும் ஒரு படி முன்னேறி, கார், ஷேர் ஆட்டோ சேவையை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

குறிப்பாக கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏஜி டிஎம்எஸ், வடபழனி ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளுக்கு வாடகை கார் வசதி செய்யப்பட்டுள்ளது. இதே போல அசோக்நகர், ஆலந்தூர், ஈகாட்டுதாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, திருமங்கலம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களுக்கு செல்லும் ஆட்டோக்களில் 10 ரூபாய் கட்டணமும், கார்களில் 3 கி.மீ., தொலைவு பயணத்துக்கு 15 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. சோதனை முயற்சியாக ஆறு மாதத்துக்கு இந்த திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

காலை, 6:30 மணி முதல் இரவு 9:30 மணி வரை இந்த சேவை கிடைக்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் அதிக வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் இந்த சேவையை அனைத்து ரயில்நிலையங்களிலும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>