டிரம்ப்பின் மாமனாரும் மாமியாரும் இனி அமெரிக்க பிரஜைகள்!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மனைவி மெலனியா டிரம்ப்பின் பெற்றோருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மகள் மெலனியா டிரம்ப்பின் ஆதரவின் (ஸ்பான்சர்ஷிப்) பேரில், குடும்ப விசா என்ற பிரிவில் அவர்கள் அமெரிக்க பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா டிரம்ப்பின் பெற்றோர் விக்டர் நாவ்ஸ் (வயது 73), அமலிஜா நாவ்ஸ் (வயது 71). இருவரும் ஸ்லோவேனியா என்னும் ஐரோப்பிய நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க கிரீன் கார்டு பெற்றிருந்த இருவரும் தங்கள் மருமகன் அதிபரான பிறகு அடிக்கடி வாஷிங்டன் நகருக்கு வந்து சென்று கொண்டிருந்தனர்.
அதிபரான மருமகன் கொள்கையடிப்படையில் எதிர்க்கும் குடும்ப விசா என்னும் தொடர் குடிபெயர்தல் (Chain migration) வகையில் இருவரும் குடியுரிமைக்கு விண்ணப்பித்து பெற்றுள்ளனர்.
அமெரிக்காவுக்கு குடிபெயர்வோர் கிரீன் கார்டு பெறுவதற்கு சில வழிகளே உள்ளன. ஆண்டுதோறும் குடும்ப உறவுகள் அடிப்படையிலேயே அதிக கிரீன்கார்டுகள் வழங்கப்படுகின்றன.
அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதியுடன் தங்கியிருப்பவர்கள் பெற்றோர், வயதுவந்த சகோதர சகோதரிகள் மற்றும் வயது வந்த திருமணமான, திருமணமாகாத பிள்ளைகள் ஆகிய குடும்ப உறுப்பினர்கள் நிரந்தரமாக அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்கு ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) தரலாம்.
வேலைவாய்ப்பு அடிப்படையிலும், அகதி என்பதாலும், சிறப்பு தன்மையின் அடிப்படையிலும் வெகு சிலரே கிரீன்கார்டு பெறுகின்றனர். குடும்ப உறவுகள் அடிப்படையில் வழங்கப்படும் கிரீன்கார்டுகளின் எண்ணிக்கை மற்ற பிரிவுகளுடன் ஒப்புநோக்க வெகு அதிகமாகும். இதை சமனாக்க, 'தகுதி அடிப்படையில்'மட்டுமே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அதிபர் டிரம்ப் கூறி வருகிறார்.
தகுதி அடிப்படையை வலியுறுத்தும் டிரம்ப் நிர்வாகம், கணவர், மனைவி ஆகிய வாழ்க்கைத் துணை, போதிய வயதை எட்டாத மைனர் குழந்தைகள் உள்பட குடும்ப உறவுகளுக்கு ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) தருவதற்கே கெடுபிடி செய்கிறது. பிள்ளைகளுக்கான வயது வரம்பு 21லிருந்து 18 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கணவர் எதிர்க்கும் சட்டப்பிரிவின் கீழ் தன் பெற்றோருக்கு அதிபரின் மனைவி குடியுரிமை வழங்க ஆதரவு (ஸ்பான்சர்ஷிப்) கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஊருக்கு ஒரு நியாயம்; தனக்கு ஒரு நியாயம் என்பது எல்லா நாட்டுக்கும் பொருந்தும்!