ஆடி அமாவாசை... நீர்நிலைகளில் திரண்ட மக்கள்

ஆடி, புரட்டாசி மாதம் வரும் மகாளாய மற்றும் தை அமாவாசை தினத்தன்று, நீர்நிலைகளுக்கு சென்று திதி கொடுத்து வழிபாடு செய்தால் முன்னோர் ஆசி கிடைக்கும். தடைப்பட்ட திருமணம், நீண்டநாள்பட்ட நோய் நொடிகள், மனவருத்தம் ஆகியவை விலகி சந்தோஷமும், மனநிறைவும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

முன்னோர்கள், தாய், தந்தையர் உயிருடன் வாழ்ந்தபோது சரிவர கவனிக்காததால் அவர்கள் படும் துன்பம் பாவத்தின் வடிவில் வந்து சேருவது பித்ரு தோஷமாக கருதப்படுகிறது.

பித்ருதோஷம் நீங்கவும், பித்ருக்கள் ஆன்மா சாந்தியடையவும் அவர்களுக்கு மறக்காமல் கரும காரியம் நிறைவேற்றிட வேண்டும். இதனால் அவர்கள் மகிழ்ச்சியுடன் ஆசீர்வாதம் செய்வார்கள். உதவிகள் பல செய்து கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

இன்று ஆடி அமாவாசை என்பதால், தமிழகத்தில் முக்கிய நீர்நிலைகளில் திரண்ட பொதுமக்கள், புனித நீராடி இறந்த மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். குறிப்பாக, ராமேஸ்வரம், வேதாரண்யம், திருவையாறு, கோடியக்கரை, பவானி, திருச்செந்தூர், நாகை மாவட்டம் காமேஸ்வரம், குற்றாலம், காவிரி ஆற்றங்கரையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

புனித நீராடிய அவர்கள், கரையில் எள், காய்கறிகள், மாவு, உணவு வகைகளை படைத்து முன்னோர்களுக்கு திதி கொடுத்ததை தொடர்ந்து, அமாவாசை விரதத்தை தொடங்கினர்.

பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் தயாரித்து வருகின்றனர்.

சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணி வைத்து அகல் விளக்கேற்றி தூபதீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபடுவார்கள். பிறகு காகங்களுக்கு விரத உணவு படைக்கப்படும். காகங்கள் உண்டபிறகு வீட்டிற்கு வந்த உறவினர்களுக்கு உணவு பரிமாறி விரதம் முடித்துக் கொள்ளப்படும்.

More News >>