கேரளாவில் வெள்ளத்தால் வீடு இழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிப்பு
கேரளாவில் மழை வெள்ளத்தால் வீடுகள் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை காரணமாக 50 ஆண்டுகள் இல்லாத நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. அணைகள் மற்றும் ஏரிகளில் தண்ணீரின் வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. இதன் எதிரொலியாக, கனமழை காரணமாக 32 பேர் பலியாகி உள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் இன்று ஹெலிகாப்டரில் பார்வையிட்டார்.
இதன் பிறகு, பினராயி விஜயன் கூறுகையில், “மழை வெள்ளத்தால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் ” என்று கூறினார்.