சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ, டாக்சி சேவை

சென்னையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவையின் ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ மற்றும் டாக்சி சேவைகள் தொடங்கியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. இது விரிவாக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பல்வேறு பகுதிகளுக்கும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரயில் கட்டணம் அதிகமாக இருப்பதால் ரயில் பயணிகளின் வரத்து குறைவாக இருக்கிறது. அப்படியும் மீறி வரும் பயணிகள் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து தங்களின் இடத்திற்கு செல்வதற்கு வேறு போக்குவரத்து தேவைப்படுகிறது என்பதாலும் இதனை தவிர்ப்பதாக கருத்துகள் தெரிவிக்கின்றனர்.

இதனால், போக்குவரத்து பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பல்வேறு இடங்களுக்கு செல்வதற்கான ஷேர் ஆட்டோ, டாக்சி சேவையை மெட்ரோ ரயில் நிறுவனம் இன்று முதல் தொடங்கி உள்ளது.

குறிப்பாக, அசோக் நகர், ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, பரங்கிமலை, சின்னமலை, நந்தனம், திருமங்கலம் மற்றும் அண்ணா நகர் டவர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவை தொடங்கப்பட்டது.

இதைதவிர, கோயம்பேடு, ஆலந்தூர், அண்ணாநகர் கிழக்கு, ஏ.ஜி.டி எம்.எஸ் மற்றும் வடபழனி ஆகிய 5 மெட்ரோ ரயில் நிலையங்களில் டாக்சி சேவை இயக்கப்பட்டன.மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 3 கி.மீ தூரத்திலான இடங்களுக்கு இயக்கப்படும். மேலும், ஷேர் ஆட்டோவிற்கு ரூ.10 மற்றும் டாக்சி சேவைக்கு ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த போக்குவரத்து சேவையினால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

More News >>