ஆர்.கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி, டிச.20: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தலை ரத்து செய்ய முடியாது என டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. நேற்றுடன் தேர்தலுக்கான பிரசாரமும் ஓய்ந்தது. இந்நிலையில், ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. தேர்தல் ஆணைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் பல லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. விதிமுறைகள் மீறி நடந்துக் கொண்ட கட்சிகளின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவையை சேர்ந்த முகமது ரபீக் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்தும் பலனில்லை. அதனால், நீதிமன்றம் தலையிட்டு ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என கூறி இருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “இடைத் தேர்தலை ரத்து செய்ய முடியாது. அதனால், மனுத்தாரரின் தாக்கல் செய்த புகார் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்றார்.
இதனால், ஆர்.கே.நகரில் நாளை எந்த தடையுமின்றி வாக்குப்பதிவு நடைபெறும் என உறுதியாக கூறலாம்.