தமிழகத்தில் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
2ஆவது முறையாக மேட்டூர் அணை நேற்று மீண்டும் நிரம்பியதைத் தொடர்ந்து, அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழத்தில் உள்ள 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மீண்டும் கன மழை பெய்து வருகின்றது. இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் மீண்டும் நிரம்பியது. அவற்றில் இருந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 519 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் உபரி நீராக திறந்து விடப்பட்டது.
நேற்று பகல் 12 மணியளவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி மீண்டும் நிரம்பியது. நேற்று மாலையில் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர், உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதில் அணையையொட்டி உள்ள நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடி நீரும், கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி நீரும், ஒரு லட்சத்து ஆயிரத்து 700 கனஅடி தண்ணீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றப்படுகிறது.
அணையில் இருந்து அதிகப்படியான நீர் வெளியேற்றப்படுவதால், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கரையோர பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான இடங்களுக்கு சென்று பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.