கேரளாவில் மேலும் 5 நாட்களுக்கு கனமழை - வானிலை ஆய்வு மையம்
கேரளாவில் பெய்துவரும் கனமழையால் அம்மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்நிலையில், மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை விடுத்திருப்பது பீதியை ஏற்படுத்துவதாக உள்ளது.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கின்றன. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இடுக்கி, வயநாடு, எர்ணாக்குளம், கோழிக்கோடு, காசர்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.
கனழைக்கு மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 60,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், கேரள மாநிலத்தில் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் எனவே, மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேரள மக்கள் பீதியடைந்துள்ளனர்.